Friday, June 15, 2012

Amma - My Mom


எவ்வளவோ நாள் எழுத  வேண்டும் என்று நினைத்து இன்று கடைசியில் எழுதி விட்டேன். இப்போது விட்டால் பின் எப்போதும் எழுத முடியாது.

அம்மா உயிருடன் இருக்கிறார். ஆம். உயிருடன் மட்டும் இருக்கிறார். பேச்சில்லை. சிரிப்பில்லை. கண்ணசைவில்லை . அழுகையில்லை. சாப்பிடவில்லை. கேட்பதில்லை.எழுபது வருட ஓட்டத்திற்கு பின் ஒரு நீண்ட ஓய்வு எடுப்பது போல் வெறித்து பார்த்தபடி, படுத்து கொண்டு இருக்கிறார்.

அம்மா ஒரு போராளி. வாழ்கையின் எல்லா கட்டங்களிலும் போராடியவர். போராட்டம் எல்லாம் முடிந்த வேளையில் இப்போது எமனுடன் போராடுகிறார்.



அம்மா வாழ்கையை பூரணமாக வாழ்ந்தவர். அவருடைய நாட்கள் என்றும் உயிர் நிறைந்ததாக இருந்தது. சிரிப்பு, அழுகை, கோபம், வெட்கம், பயம் எல்லாம் அடங்கிய வாழ்க்கை.நினைத்து பார்க்கையில் அம்மாவில் பாதி அளவு கூட என்னால உணர்ச்சிகளை காட்ட முடிவது இல்லை. அம்மா உணர்ச்சிகளை வெளிப்படுத்த தயங்கியதும் இல்லை, தவறியதும் இல்லை.
சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் அழுகையுடன் ஓடி வந்து என்னை கட்டிக் கொண்டு அழுததும், அடுத்த வினாடியே "ஊர என்னமா வச்சிருக்கான்" என்று ஆச்சரியப் பட்டதும், ஊருக்கு போன் செய்து பெருமையும், சிரிப்பும் கலந்து பேசியதும், பேத்தி குரலை கேட்டதும் போனில் அழுததும், நடந்தது 10 நிமிடங்களில். இதில் எந்த உணர்ச்சிகளும் பொய் இல்லை.

அம்மாவிற்கு எந்த "motivation factor" இருந்தது என்று தெரியவில்லை. ஒரு நாளும் நிற்காமல் ஓடினார். mixie/grinder/washing machine, fridge எதுவும் இல்லாத காலத்திலும், அம்மா 5 பிள்ளைகளுக்கும், 3 வேலையும் குறைந்தபட்சம் 3 வித சமையல் செய்தார். எல்லோருடைய துணிமணி துவைத்தார், பள்ளிக்கு நேரத்திற்கு சென்று வந்தார், நல்ல ஆசிரியர் என்று பெயர் எடுத்தார், சாயங்காலம் tuition எடுத்தார், இரவில் அக்கா/தங்கையுடன் கதை பேசினார், பிள்ளைகளுக்கு பாடம் சொல்லியும் கொடுத்தார். கிட்டத்தட்ட 35 வருடங்கள் இதை செய்தார், எந்தவித சலிப்பும், கவலையும், விருதுகளும் இன்றி.

அம்மாவிற்கு தெளிவான தேவைகள், முடிவுகள், ஆசைகள் உண்டு. எவருக்காகவும் , எதற்காகவும் அவற்றை மாற்றியது இல்லை. இன்றும் எனக்கு எது சந்தோசம் தரும், எது துக்கம் தரும் என்பதில்  சந்தேகம் உண்டு. அம்மாவிற்கு அந்த சந்தேகம் இருந்ததாக தோன்றவில்லை.கணவரும் பிள்ளைகளும் சந்தோசமாக இருப்பதே அவரது சந்தோசம். அதற்காக அவர் எவ்வளவோ கஷ்டப்பட்டார். வீடு எவ்வளவோ கஷ்டத்தில் இருந்தாலும், கடன் வாங்கி தீபாவளி கொண்டாடுவார். அதுவும் சாதாரண சேலைகள், துணிமணிகள் அல்ல. அம்மாவும் அவரது தமைக்கையரும் தீபாவளி துணி எடுக்க சென்றால், கோவில்பட்டி துணி கடைகள் அனைத்தும் நடுங்கும். ஒரு சேலை எடுத்து, அதன் டிசைன் மாற்றி, பின் கலர் மாற்றி, ரகத்தை மாற்றி, கடைசியில் தீபாவளியின் முதல் நாள் இரவு முதல் சேலையே வந்து சேரும். அப்பாவிற்கும், அம்மாவிற்கும்  மாத சம்பளம். ஆனாலும், எந்த வித திட்டமிடலும் இல்லாமல், அம்மா எல்லா பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்தார். நான் +2 முடித்து BSC கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க ஆசைப்பட்ட போது, என் பேச்சை மட்டுமே நம்பி, 3000 ரூபாய் கடன் வாங்கி வந்தார். ஒரே நேரத்தில், என்மூன்று அண்ணன்களையும், ஒரு அக்காவையும் ஹோஸ்டேல்இல் தங்கி படிக்க வைத்தார். அம்மாவின் பொருளாதார மேலாண்மை வியப்பிற்குரியது.



சமையல் ஆகட்டும், teaching ஆகட்டும், பையன்களுக்கு பெண் பார்ப்பது ஆகட்டும், கல்யாண வீட்டு வேலைகள் ஆகட்டும், அம்மாவின் அர்ப்பணிப்பு எப்பொழுதும் 100%.

அம்மாவுக்கு சிரிப்பதை விட அழுவதற்கு கிடைத்த சந்தர்பங்கள் அதிகம். ஐந்தில் ஏதாவது ஒரு பிள்ளை உடம்பு சரி இல்லாமல் இருக்கும், ஏதாவது ஒரு பிள்ளை கவலையுடன் இருக்கும், ஏதாவது ஒரு பிள்ளம் கோபத்துடன் இருக்கும். இவை எல்லாவற்றிக்கும் அம்மாதான் சுமை தாங்கி. எல்லா பிள்ளைகளும் கல்யாணம் ஆகி குழந்தைகளுடன் இருந்த போதும், அம்மாவிற்கு ஏதாவது கவலை இருந்தது. மதி அண்ணனை பற்றி கவலைப்படுவார், தனியாக இருக்கிறானே என்று, இளங்கோ அண்ணனை பற்றி கவலைப்படுவார், நல்ல வேலை இல்லையே என்று, கண்ணா அண்ணனை பற்றி கவலைப்படுவார், இன்னும் சின்ன பையனாகவே இருக்கிறானே என்று, என்னை பற்றி கவலைப்படுவார், சிங்கப்பூரில் தனியாக இருக்கிறானே என்று, அம்மாவின் கவலைகள் ஏராளம்.அம்மாவை அப்போது எல்லாம் எந்த கவலையும் இல்லாமல் இருக்கச்சொல்லி எரிச்சல் படுவோம். இப்போது, யாரும் எங்களை பற்றி கவலைப்பட இல்லை என்பதே எங்களை சூழ்ந்துள்ள வெற்றிடத்தை காட்டுகிறது .

முதன் முதலாக சர்க்கரை நோய் வந்த போது, வீட்டிற்க்கு வந்தவுடன் ஓவென அழுதார். வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக பயந்தார். எல்லோரும் அவரை சுற்றி உட்கார்ந்து ஆறுதல் சொன்னோம். எல்லாம் ஒரே நாள். மறு நாள், சாயுங்கலமே, sugarfree tablet வந்தது. காப்பியும் தொடர்ந்தது. அன்று முதல் அம்மா எங்கு சென்றாலும், sugarfree tablet மறப்பதில்லை.

அடுத்ததாக அம்மாவிற்கு நடையில் மாற்றம் வந்தது. ஒரு காலை இழுத்து நடந்தார். டாக்டரிடம் கூட்டி  சென்ற போது, பெரிய விஷயம் இல்லை, வயசு காரணம் என்று சொன்னார். காலை இழுத்துக்கொண்டே, என் வீட்டுக்கும் அண்ணன் வீட்டுக்கும் தினமும் 10 முறையாவது நடப்பார். அதே காலுடன், சிங்கப்பூர்  வந்து மஞ்சுவை பார்த்துக் கொண்டார், அட்டு மஞ்சு வயிற்றில் இருக்கும் போது.

பின் அம்மாவிற்கு மறதி அதிகம் ஆனது. அன்றன்று நடந்தது மறக்க ஆரம்பித்தது. பழைய விஷயங்கள் நல்ல நினைவில் இருந்தது. தான் சொன்னது சரி என்று எல்லோரிடமும் சண்டை போடுவார்கள். ஏனென்றால், அம்மாவிற்கு அவரின் நினைவாற்றலில் அவ்வளவு நம்பிக்கை.

முதன் முதலாக அம்மாவை மருத்துவமனையில் சேர்த்தது முதுகெலும்பில் அழுத்தம் உண்டானது என்று. திரும்பியதும், நடை கடினம் ஆக தொடங்கியது. நரம்பியல் டாக்டர் இது மூளையில் நீர் தேங்குவதால் வருவது என்று சொன்னார். அதன் பின் அம்மாவின் உடல் நிலையில் மேலும், மேலும் பின்னடைவுதான்.

பார்கின்சன் சேர்ந்து அம்மாவை மீண்டும் முடக்கியது. அம்மாவை படுத்த படுக்கையாய் பார்த்தவுடன் பதறி போய் , மதுரை/சென்னை என்று ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்தது இன்றும் நினைவில் உள்ளது. கடைசியில் அப்போலோவில் ஆபரேஷன் முடிந்து, அம்மா சிறிது நடக்க ஆரம்பமானது, மிகவும் சந்தோசமானது.

அம்மாவின் கடைசி காலம் வந்ததாக உணர்ந்தேன். சென்னை வந்து சேர்ந்தவுடன், அம்மா என்னுடன்  சில காலம் கூட இருந்தார். போராளியான அம்மாவிற்கு தன்னம்பிக்கை ஊட்ட வேண்டிய தருணம் அது. தினமும் காலையில், அம்மா என் கை பிடித்துக் கொண்டு நடை பயின்றது, அம்மாவிற்கு பிடித்த உணவு வகைகள் வாங்கி கொடுத்தது, அடிக்கடி, காரில் வைத்துக் கொண்டு ஊர் சுற்றி காண்பித்தது என்று, அம்மாவிற்கு என்னால் செய்ய முடிந்த விஷயங்கள் சில. கடைசியாக அம்மா சென்னை எக்மோரில் 8 கோச் நடப்பதற்குள், உடல் முழுவதும் வியர்வையில் நனைந்து விட்டது. wheel chair  கொண்டு வர ஓடிய போது, நான் நடந்தே வருவேன் என்று நடந்தது அம்மாவின் வாழ்கையின் மீதான ஆசைக்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டு.

அம்மா ஒரு சுதந்திர பறவை. யாரையும் சார விரும்ப மாட்டார். பார்கின்சன் அவரை வீட்டுக்குள் முடங்க வைத்தது அவருக்கு மிகப் பெரிய மன ஏக்கத்தை உண்டாக்கி விட்டது. அவரால் சாப்பிட முடியாமல் போன போது, மற்றவர்கள் ஊட்டி விட்டுத்தான் சாப்பிட வேண்டும் என்ற நிலைமை வந்த போது, பிடித்தும் பிடிக்காததாய், கண்களில் ஒரு வித எரிச்சலுடன் அம்மா உணவு கொள்ளும் காட்சி காண இயலாதது. அந்த உணவும் உற்கொள்ள முடியாமல், உணவு முழுவதும் தொண்டையில் கட்டிக் கொண்டு, கண்ணீர் மல்க அம்மா கஷ்டப்படுவதை பார்த்த பின், நான் சாப்பிடும் வேலைகள் எல்லாம் என்னை ஒரு குற்ற உணர்ச்சி ஆட்கொண்டு கூனி குறுக செய்கிறது.

எதுவுமே முடியாமல், wheel chair  மட்டுமே என்று ஆன பின், ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேச முடியும் என்ற நிலையிலும் கூட, ஒரு நாள் கண்ணா அண்ணன் பல் பிடுங்கி வந்த போது, சுஜியை (கண்ணா அண்ணன் மகள்) அழைத்து, "அவன் தூங்கட்டும், அவன் பக்கத்தில் போகாதே" என்று சொன்னது, தாய்மையின் உச்சம்.

அம்மாவுக்கு என் மேல் தனி பாசம். எல்லா பிள்ளைகளின் மேலும் பாசம்தான், ஆனாலும் நான் கடைக்குட்டி. இள வயதில் அம்மாவின் கஷ்ட காலங்களில் கூட இருந்தவன். அம்மா மனது நோகும் படி பேசாதவன். அம்மாவுக்கு நான் அவர்களை சிங்கப்பூர் கூடி சென்றது பெரிய சந்தோசம். எவ்வளவோ கஷ்டம் இருந்தாலும், என்னை பார்த்தவுடன், "மகேஷ் பா " என்று சிரிப்பார். அந்த சிரிப்பை குடுக்கக் கூட, இப்போது அவரது முக தசைகள் அனுமதிப்பது இல்லை.

அம்மாவின் வெறித்த கண்ணுக்குள், நாங்கள் தேடும் சிரிப்பு, சோகம், கவலை, பாசம் எதுவும் தெரியவில்லை. அவை இருந்த போது கொண்டாட தெரியவில்லை. இப்போது கொண்டு வர வழியில்லை.

"அம்மா ஒரு அழகான சோகம்"...இதுதான் என் மனதில் எப்போதும் ஓடும். அவர்  போட்ட உழைப்புக்கும், பட்ட கஷ்டங்களுக்கும், நல்ல மனதிற்கும், கடமைகளின் மேலிருந்த அர்பணிப்புக்கும் பிறகு, அவரின் முடிவு எந்தவித நியாய விளக்கங்களுக்கும் அப்பாற்பட்டது.

எல்லா அம்மாவிற்கும் இது பொருந்தும். ஒரு அம்மாவால் எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் கவலைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடிகிறது. எத்தனை பிள்ளைகள் சேர்ந்தாலும் ஒரு அம்மாவை அதே அர்பணிப்புடன் கவலை இல்லாமல் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. இந்த உண்மை என் நெஞ்சை அரித்துக் கொண்டே இருக்கும்.